புதன், 7 ஜூலை, 2010

தனியாருக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்!


ஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.
இந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ், மெஹ்நாத் ஸாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னோடிகள். பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ன் முதல் இந்திய இயக்குநராக சர். சி. வி. ராமன் பதவி வகித்தார். மெஹ்நாத் ஸாகா, கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் பிஃசிக்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். இவரது மாணவரான நாக் சவுத்ரி 1942ம் ஆண்டில், அணுக்கருவை பிளக்க உதவும் கருவியான சைக்ளோட்ரானை இந்தியாவிற்கு முதன்முதலாக கொண்டு வந்தார்.
இந்த முயற்சிகள் அனைத்திற்கு பின்புலமாக இருந்தவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. இவர் இந்தியாவின் பெருமுதலாளிகளுள் ஒருவரான ஜே.ஆர்.டி. டாடாவின் சகோதரர் மகன்.
இவருடைய தலைமையில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்திய அணுசக்தி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகள் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆணையம் கேட்டுக்கொண்டபடி 1954ம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை நிர்மாணிக்கப்பட்டது.
முதல் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு 10வது ஆண்டில் அதே ஆணையம் மேலும் கூடுதல் அதிகாரங்களுடன் இரண்டாவது அணுசக்தி ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் மீண்டும் டாக்டர் ஹோமி ஜே. பாபா-வே பதவி ஏற்றார்.
இவர் பிரதமர் நேருவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். வேறு யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மறுக்க தலைவருக்கு முழு உரிமை உண்டு. இந்த ஆணையம், தனக்கு தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.
இத்தகைய ஜனநாயகத்தன்மை வாய்ந்த இந்திய அணுசக்தி ஆணையத்தில் தலைவரான டாக்டர் ஹோமி ஜே.பாபாவின் உறவினரும், இந்தியாவின் பெருமுதலாளிகளில் முதன்மையானவருமான ஜே.ஆர்.டி. டாடா இந்திய அணுசக்தி ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அணுசக்தி சட்டம்
இந்தியாவின் முதல் அணுசக்தி சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டில் அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய அணுசக்தி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
சில உதாரணங்களை பார்ப்போம்...
அணுசக்தி சட்டத்தின் பிரிவு 3 (சி) தடை செய்யப்பட்ட தகவல்களைப் பற்றிக்கூறுகிறது. அணுசக்தி ஆணையத்தால் முன்னரே வெளியிடப்பட்ட அல்லது பதிப்பிக்கப்பட்ட தகவல்களைத்தவிர
(1) கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த இடம், தரம் மற்றும் அளவு
(2) அந்தப் பொருட்களை தயாரிக்கும் அல்லது பயன்படுத்தும் முறை
(3) ஐசோடோப்புகளையோ அல்லது வேறெந்த பொரு ளையோ தயாரிப்பதற்கு - பயன்படுத்துவதற்கான கோட்பாட்டு முறை, வடிவம், கட்டமைப்பு மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள்
(4) அணு உலைகள் குறித்த கோட்பாடுகள், வடிவம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த தகவல்கள்
(5) மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து பெறப்படும், ஆய்வு செய்யபடும் தகவல்கள்
.........ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்ட தகவல்களாகும்.
அணுசக்தி சட்டத்தின் பிரிவு 18 தகவல் வெளிப்படுவதை தடுப்பது குறித்து கூறுகிறது.
18. தகவல் வெளிப்படுவதை தடுத்தல்
(1) மத்திய அரசு கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்த ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், திட்ட வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை வெளியாவதை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்
(a) அணுசக்தியை உற்பத்தி செய்தல், மேம்படுத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும், ஈடுபட திட்டமிட்டுள்ள அமைப்புகள், அல்லது
(b) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகள் தேவைகள் மற்றும் செயல்முறைகள், அல்லது
(c) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகளின் இயங்குமுறைகள்
(2) எந்த ஒரு நபரும் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது.
(a)மேற்கூறப்பட்ட 18ம் பிரிவின் முதல் துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை பெறுவதற்கோ, பெற முயற்சிக்கவோ, அதனை வெளிப்படுத்தவோ கூடாது.
(b) இந்த சட்டத்தின்படி பணியாற்றுபவரோ, வேறு எந்த செயல்களை செய்பவரோ மத்திய அரசின் உத்தரவின்றி மேற்கூறப்பட்டவை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.
இந்திய அணுசக்தி சட்டத்தின் பிரிவு 24 மேற்கூறிய குற்றங்களை செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று கூறுகிறது.
மேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பதிவு செய்யவும் தடைகள் இருந்தன. இவ்வாறு மத்திய அரசுக்கும், அதன் அதிகார மையங்களுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை கொடுத்த இந்திய அணுசக்தி சட்டம், இந்திய மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அணுசக்தி திட்டங்கள் குறித்த எந்த தகவலையும் பெற முடியாத நிலையிலேயே வைத்திருந்தது. வேறு வகையில் இந்த தகவலை பெறுவதையும் கடும் குற்றமாக நிர்ணயித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்க வழிவகுத்த இந்திய அணு சக்தி சட்டம், 1962-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
குறிப்பாக இந்திய தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry), நாட்டின் மிக முக்கியமான அணுசக்தி திட்டத்தில் தனியார் துறை பங்கேற்பதற்கு தற்போதைய அணுசக்தி சட்டம் பெருந்தடையாக இருப்பதாகவும், எனவே அந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என்பதும், இந்தியக்கூட்டாளிகளின் மூலம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பிரபல அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா தலைமையில், அணு சக்தி சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு 1997ல் அமைக்கப்பட்டது. இந்த குழு 1998ம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து பணியாற்றி வருகிறது. டாடா, ரிலையன்ஸ், எல் அன்ட் ட்டி போன்ற இந்திய நிறுவனங்களும், பிரான்ஸ் நாட்டின் அரெவா போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் இந்திய அணுசக்தி துறையில் படிப்படியாக பங்கேற்க வழியேற்படுத்துவற்கே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.
அதாவது தமது உழைப்பின் மூலம் அரசுக்கு வரி செலுத்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட விவரங்கள், இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கும், அதன் இந்திய ஏஜென்ட்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்தியாவின் அணுசக்தி கொள்கைகளை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் இந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப் போகின்றன.
நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட ரகசியங்கள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தவணைமுறையில், மலிவு விலையில் தாரை வார்க்கப்படவிருக்கிறது.
மின் ஆற்றலுக்கான ஒரே வழி அணு சக்திதான் என்று நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் அரசின் செயல்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் அந்த கருத்தில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்ப அனுமதிப்பது மென்மேலும் கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்லத்தான் ஆளில்லை.

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்


உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing) என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...

 


மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது.
.
சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
-என்ற திருக்குறளே பழந்தமிழர், சுற்றுச்சூழல் குறித்து கொண்டிருந்த பரந்த பார்வையை விளக்கும்.
.
சுதந்திரத்திற்கு பிந்தைய சட்டங்களே நாட்டின் இன்றைய நிலையை நிர்ணயிப்பதால், தற்போதைய சட்டங்களை குறித்து பார்ப்போம்.
.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் முதன்மையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டமே! இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கும் (உறுப்பு 48A) , குடிமக்களுக்குமான (உறுப்பு 51A[g]) சுற்றுச்சூழல் குறித்த கடமைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழி காட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “அரசு அமைப்புகள் தேசத்திலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்”..
சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது (A) பகுதியில், குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, “இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கைச் சுற்றுச் சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும் ஆவன புரிவதை கடமையாக கொள்ள வேண்டும்”.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்து மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சுற்றுச்சூழல் குறித்த அரசு மற்றும் குடிமக்களின் கவனம் தேவையான அளவு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதைப் புரிந்து கொள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மைகள் குறித்து சுருக்கமாக புரிந்து கொள்வது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள அம்சங்களில் பலவும் செயல்படும் தன்மை வாய்ந்தவை. அந்த அம்சங்கள் செயல்படாது விடப்பட்டால் அது குறித்து வழக்கு தொடரமுடியும். இந்த அம்சங்கள் அடிப்படை உரிமைகள் எனப்படுகின்றன.
.
ஆனால் அதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் செயல்படா தன்மையுடையதாகவும் இருக்கின்றன. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் உள்ள அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்த வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 37ன் படி, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவையாகும். சட்டங்களை இயற்றும்போது, இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை, எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.
.
இவ்வாறு நீதிமன்றங்களின் மூலம் வலியுறுத்த இயலாத பிரிவுகளின் கீழ்தான் மேலேக் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
.
எனினும் அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இந்திய நீதித்துறையையும் ஓரளவு நல்லவிதத்தில் பாதிக்கவே செய்துள்ளது. நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஏ. எம். அஹமதி மற்றும் மூத்த வழக்கறிஞர் எம். சி. மேத்தா போன்றவர்களின் உழைப்பாலும், ஈடுபாட்டாலும் சுற்றுச்சூழல் குறித்த இந்திய நீதித்துறையின் பார்வை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
.
இந்திய அரசியல் சட்டத்தின் செயல்படும் பிரிவில் அமைந்துள்ள உறுப்பு 21ல் குறிப்பிடப்பட்டுள்ள, சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது என்ற சட்ட வாசகத்திற்கு மிகவிரிந்த பொருளை நீதிபதிகள் கொடுத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற புரிதலில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது அடிப்படை உரிமை மீறலாக பொருள் கொள்ளப்பட்டு பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
.
இந்த அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் கீழ் கீழ்க்கண்ட கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
.
1. வாழ்வதற்கான உரிமை என்பது மாசுபடாத சுற்றுச்சூழலுக்கான உரிமையாக பொருள் கொள்ளப்படும். இது அனைவருக்கும் பொதுவானது.
.
2. அரசுக்கொள்கைகளை செயல்படுத்தும் அதிகாரக்குழுக்கள் சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக செயல்படுத்தும் பொறுப்பும், கடமையும் கொண்டவை.
.
3. சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்யத்தவறுவதற்கு நிதி ஆதாரம் இல்லை என்றோ, தேவையான பணியாளர்கள் இல்லை என்றோ அரசு அமைப்புகள் கூறக்கூடாது.
.
4. சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு பகுதியான “மாசுபடுத்துபவரே செலுத்துதல்” (Polluter pays principle) என்ற அடிப்படையில் மாசுக்கேடுக்கு காரணமானவரே அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.
.
5. “முன்னெச்சரிக்கை குறிக்கோள்”(Precautionary principle) –படி அரசு அதிகார அமைப்பு, சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்கான காரணங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். புதிய மேம்பாட்டு பணிகளும், தொழில் அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றின் உரிமையாளர்களுக்கே உடையது.
.
6. சுற்றுச்சூழல் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் (அ) மைய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் கொள்கை; (ஆ) நின்று நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல்; மற்றும் (இ) முந்தைய தலைமுறையிடம் பெற்ற சுற்றுச்சூழலை எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமை போன்ற அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
.
7. சுற்றுச்சூழல் சட்டங்களை பொருட்படுத்தாமல், வளர்ச்சி பணிகளை அல்லது தொழில் முயற்சிகளை மேற்கொள்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
.
8. சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் நோக்கங்களை முறியடிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது.
.
9. இயற்கை வளங்கள் அனைத்திற்கும், அரசே பொறுப்புரிமையர் (trustee) ஆகும். கடற்கரை, ஓடும் தண்ணீர், காற்று, காடுகள், மென்மையான நிலங்கள் ஆகிய அனைத்துக்கும் பொதுமக்களே பயனாளிகள். இந்த இயற்கை வளங்களை தனியார் உரிமையுரிமையாக மாற்றுவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.

மேற்கூறப்பட்ட கொள்கைகள் பல்வேறு வழக்குகளின் தீ்ர்ப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும், நடைமுறையில் பல்வேறு பிரசினைகளிலும் இந்த கொள்கைகளுக்கு எதிரான அரசு உத்தரவுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் வருவதை அனைவரும் உணர முடியும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு அமைப்புகள் கொள்கை முடிவுகளை மேற்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்த தேவையான சட்டங்கள் போதுமான அளவில் இல்லாமையே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணமாகும். மேலும் இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு அமைப்பு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும். அந்த சட்டங்களை செயலிழக்க செய்வதில் அரசு மற்றும் தனியார் தொழில் துறைகளும் முனைப்புடன் நிற்பதும் இந்த பிரச்சினைக்கான மிகமுக்கியமான காரணமாகும்.

திருமண சட்டம்

திருமண  சட்டம்  

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் மணவிலக்கு என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க மணவாழ்வுரிமை மீட்பு சட்டம் பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை
என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.
சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,
1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
... மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே தலாக் எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி

  1. நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,

  1. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,

  1. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,

  1. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

  1. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...
...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள். அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...!
-

பிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா?

ஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.

பெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குபின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.

திருமணத்திற்குபின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.
கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.

மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.

மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.
சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.

இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.
அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக்கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத்தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.
சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.


திருமணப்பதிவு ஏன்? எப்படி?

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.
இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.

எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது.
மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.

இந்து திருமணத்தை பதிவு செய்தல்.

இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம்.
மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம்.
மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது.
உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.

அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.

இஸ்லாமியத் திருமணங்கள்

இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.

இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.

(குறிப்பு: மிகவிரிவான ஒரு தலைப்பு, மிகச்சுருக்கமாக எழுதப்பட்டு்ள்ளது. ஐயங்களை மறுமொழிப்பெட்டியில் இட்டால் உரிய பதில்களை தேடி வழங்குவதற்கு முயற்சிக்கிறேன்)


இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!

காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.
.மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.
இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.
.
சட்டத்தின் பார்வையில்.....
பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்
மேற்கூறிய சட்ட வாசகத்தில் இயற்கை முறை என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.
குறி்ப்பாக திருநங்கைகள் () அரவானிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.
மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.
இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.
திருநங்கைகள்
இந்நிலையில் திருநங்கைகள் () அரவானிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.
ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.
திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.
இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள்
அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.
சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.
இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் மெக்காலே என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.
மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.
ஆனால், தன்பாலின இச்சை இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.
அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)
இந்த சட்டப்பிரிவின்படி, இயற்கைக்கு மாறான காம இச்சையுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம் என்பதாகவே கருதப்படும்.
எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.
அடுத்தது என்ன?
இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.
அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.

-சுந்தரராஜன்