செவ்வாய், 21 செப்டம்பர், 2010

நுகர்வோர் அமைப்புகளை புறக்கணித்தால் போராட்டம்! குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் எச்சரிக்கை

ஊட்டி : "மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளை அழைத்து கூட்டம் நடத்தத் தவறினால், போராட்டம் நடத்தப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில், பல தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்படுகின்றன; மாவட்ட நிர்வாகம் மற்றும் இதரத் துறை சார்ந்த குறைபாடு, புகார்களை, துறைகளுக்கு தெரிவித்து, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.


நுகர்வோர் சார்ந்த குறைகளையும், மக்கள் பிரச்னைகளையும் சுட்டிக் காட்டும் வகையில், அனைத்து நுகர்வோர் அமைப்புகளை அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி குறைபாடுகளை களைய வேண்டும். அரசாணை எண் 389ன் படி, மாவட்ட கலெக்டரகம் மற்றும் இதர அரசுத் துறைகளின் தலைமையகத்தில், மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளை அழைத்து, ஆண்டுக்கு 4க்கும் குறையாமல் கூட்டம் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


அரசாணை எண் 616ன் படி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருமுறை நடத்த வேண்டும்; தேர்வு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பினர் மற்றும் இதர அரசுத் துறையினர் பங்கேற்று பதில் அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், சில அமைப்புகளை மட்டுமே அழைத்து, ஒரு கூட்டத்தை நடத்துகிறது; தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் குழுவின் கூட்டத்தை ஒருங்கே நடத்தி, அரை மணி நேரத்தில் முடித்துக் கொள்கிறது.


மாவட்டத்தில் செயல்படும் பல தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளை, ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. பல துறைகள், கூட்டத்தை நடத்துவதே இல்லை. அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளையும் அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்; மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவை மாற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மூலம், மாநில நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவை மாற்றி அமைக்கவும், அனைத்து தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், கமிஷனர், மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.


எனினும், இதுவரை பிற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளை அழைத்து கூட்டம் நடத்த, நிர்வாகம் முன்வரவில்லை. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுவை மாற்றி அமைப்பதாக கூறி, மீண்டும் பழைய படியே நுகர்வோர் குழுவை அமைத்துள்ளது. கமிஷனரின் அறிவுரையின் படி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவை விரைவில் மாற்றியமைத்து, அனைத்து தன்னார்வ, நுகர்வோர் அமைப்புகளை அழைத்து நுகர்வோர் கூட்டம் நடத்த வேண்டும்; தவறினால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், அனைத்து நுகர்வோர் அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக