திங்கள், 4 மார்ச், 2013

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகம்


பூரண மதுவிலக்கை வலியுறுத்தி
துண்டு பிரசுரம் வினியோகம்
ஊட்டி, மார்ச் 4:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி சென்னையில் காந்தியவாதி சசிபெருமாள் கடந்த 33 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசி பெருமாள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மையம் மற்றும் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் மதுவிலக்கின் அவசியம் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஏ.டி.சி., சேரிங்கிராஸ் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன், ராஜூபெட்டன், கேத்தி நஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் மாவட்ட வழங்கல் அலுவலர் தகவல்


போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் மாவட்ட வழங்கல் அலுவலர் தகவல்
ஊட்டி, மார்ச் 3:
நீலகிரி மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பொதுவிநியோக திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஊட்டியில் நடந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராஜ் பேசியதாவது:
அரசு ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது. சர்க்கரை மற்றும் உணவு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் ரூ.4900 கோடியை ஒதுக்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் 397 ரேஷன் கடைகள் உள்ளன. 2 லட் சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதமும், பருப்பு வகைகள் 86 சதவீதமும், மண் எண்ணெய் 80 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிப கழகம், மகளிர் குழுக்கள் மூலமாக ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக தெரிந்தால் உடனடியாக இணை பதிவாளருக்கு புகார்கள் தெரிவிக்கலாம். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறைவாக இருந்தால் உடனடியாக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அனைத்து ரேஷன் கார்டுகளிலும் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதனை பார்த்து உடனடியாக கலெக்டர், மாவட்ட வழங்கல் அலு வலர், மண்டல மேலாளர், இணை பதிவாளர் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். ரேஷன் கார்டுகளை அடமானம் வைப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். போலி குடும்ப அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அதனை ஒழிப்பது மட்டுமின்றி பிடித்து கொடுத்தவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப் படும்.
புதிய கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உரிய சான்றுகள் இணைத்து விண்ணப்பித்தால், ஆய்விற்கு பின் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.